| |
| சென்னை:சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்த உள்ள அதிநவீன ஏ.சி., பஸ்களில் பயணம் செய்ய மற்ற பஸ்களை விட இரண்டரை மடங்கு கட்டணம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட உள்ளது. இதற்கு குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகும். இந்த 'வால்வோ' பஸ்சை முதல்வர் கருணாநிதி நேற்று பார்வையிட்டார்.சென்னை மாநகர போக்கு வரத்துக்கழகம் அதிநவீன குளிர்சாதன 'வால்வோ' பஸ்களை நான்கு வழித்தடங்களில் இயக்க உள்ளது. தடம் எண்.21ஜி- தாம்பரத்தில் இருந்து பிராட்வே வரையும், தடம் எண். 19 ஜி- பிராட்வேயில் இருந்து கோவளம் வரையிலும், தடம் எண் 70- தாம்பரத்தில் இருந்து ஆவடி வரையிலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து பிராட்வே வரையிலும் என நான்கு வழித்தடங்களில் இந்த பஸ் இயக்கப்படும்.முற்றிலும் குளிர்சாதனம் செய்யப்பட்ட இந்த தாழ்தள பஸ்சின் தளத்தை மூன்று நிலைகளில் உயர்த்தவோ, குறைக்கவோ முடியும். இதனால் பஸ்சில் வயதானவர்கள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் சிரமமின்றி ஏறி இறங்க முடியும். மேலும், சாலையில் உள்ள மேடு பள்ளங்கள், வேகத் தடைகளால் பஸ்சின் அடித்தளம் சேதமடையாமல் பாதுகாக்க 'ஏர் சஸ்பென்ஷன்' வசதி இந்த பஸ்சில் உள்ளது.இந்த பஸ்சின் நடுப்பகுதி கதவு மற்றும் பின்பகுதி ஆகியவற்றில் இரண்டு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, அதன் 'எல்இடி' திரை, டிரைவரின் முன் பகுதியில் அமைக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் படிக்கட்டில் ஏறி இறங்கும் பயணிகளையும், பஸ்சின் பின்பகுதியில் வரும் வாகனங்களையும் டிரைவர் கவனித்து பஸ்சை ஓட்ட முடியும்.இதுதவிர, பஸ்சில் இரண்டு தானியங்கி கதவுகள் 'சென்சாருடன்' பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ளது. இந்த கதவுகளை மூடும் போது பயணிகளின் கை, கால், உடமைகள் சிக்கிக் கொண்டால் கதவுகள் உடனே தானாக திறந்துவிடும். பஸ்சின் முன், பின் மற்றும் இடது பக்கவாட்டில் நவீன தொழில்நுட்பத்திலான வழித்தடப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை பார்த்து இரவிலும், பகலிலும் வழித்தட அறிவுப்புகளை, பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் தெரிந்து கொள்ளலாம். இருக்கைகளும் அழகிய வடிவத்தில் நேர்த்தியாக அமைக்கப் பட்டுள்ளன. பயணிகளுக்கு தகவல்களைக் கொடுக்க 'மைக்' மற்றும் 'ஆம்பிளிபையர்' பொருத்தப்பட்டுள்ளது. டிரைவர் மற்றும் கண்டக்டர் அவ்வப் போது பயணிகளுக்கு தேவையான தகவல்களை இதன் மூலம் கூறுவர். இசை ஒலித்துக் கொண்டிருக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. 'லேப் டாப்' உபயோகிப்பவர்களுக்கு தனி வசதியும், மொபைல் போன்களை சார்ஜ் செய்து கொள்வதற்கு சிறப்பு வசதியும் இதில் உள்ளன.இந்த நவீன பஸ் நேற்று தலைமைச் செயலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. முதல்வர் கருணாநிதி இந்த பஸ்சை பார்வையிட்டார். பஸ் குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியன் கூறும் போது, ''ஒரு பஸ் 78 லட்சம் ரூபாய் செலவாகிறது. கர்நாடகா, புனே, டில்லி ஆகிய நகரங்களில் இந்த வகை பஸ்கள் ஓடுகின்றன. சுவீடன் தயாரிப்பான இந்த பஸ்சின் உடற்கட்டு பெங்களூருவில் செய்யப்பட்டது. 300 குதிரைசக்தி திறன் கொண்ட இந்த பஸ் முதலில் நான்கு வழித்தடங்களில் இயக்கப்படும். இதற்கு வரவேற்பு இருந்தால் அனைத்து வழித்தடங்களிலும் இது போன்ற பஸ்கள் இயக்கப்படும். இதில் பயணம் செய்ய சாதாரண பஸ்களை விட இரண்டரை மடங்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்படும். குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் இருக்கும். இதில் பணம் கொடுத்து மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். சீசன் டிக்கெட், இலவச பாஸ் போன்றவை இதற்கு பொருந்தாது ,'' என்றார்.போலீசார், போக்குவரத்து ஊழியர்கள் இதில் 'ஓசி' பயணம் செய்ய முடியாது. |
Thursday, September 13, 2007
சென்னை நகரில் 'ஏசி' பஸ்கள் குறைந்த பட்ச கட்டணம் ரூ.10
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment